Posted by : Unknown Sunday 18 January 2015


கார்ல் மார்க்ஸ், தற்போது ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவர் 1824 இல் கிறிஸ்துவராக மதம் மாறிய ஒருயூதரான ஹைன்றிஷ் மார்க்ஸ் எனும் வசதி படைத்த வழக்கறிஞர் ஒருவரின் மூன்றாவது மகனாவார். பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டம், வரலாறு,  மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்றார். யெனா பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தினை பெற்றார்.
     அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளாரெனினும் இவரது ஆய்வுகளினதும் , கருத்துக்களினதும் அடிப்படை, வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வுசெய்தல் என்பதாகும்.
 
பொருள்முதல்வாதக் கொள்கை மீதான கார்ல் மார்க்சின் விரிவான விளக்கமே மார்க்சிய பொருள்முதல்வாதம் எனப்படுகிறது. மரபான பொருள்முதல் வாதத்தின் மாறாநிலையை, போதாமையாக உணர்ந்த கார்ல் மார்க்ஸ், பொருள்முதல் வாதத்தினை இயங்கியல் தத்துவத்தோடு இணைத்து இயங்கியல் பொருள்முதல் வாதமாக வளர்த்தெடுத்தார். மனம், கடவுள், ஆன்மா எனும் கருத்துருவங்களே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம்படியானது எனும் கருத்துமுதல்வாதிகளின் முடிவினை முற்றாக கழித்ததாக பொருள்முதல்வாத தத்துவம் அமைகிறது. கடவுள் , மனம் போன்றவை புறச்சூழல் மீது செலுத்தும் தாக்கத்தினை விட, புறச்சூழல் மனம், மனித சிந்தனை ஆகியவற்றின் மீது செலுத்தும் தாக்கமே முதன்மையானது என கருதுவதே பொருள்முதல்வாதம். இது கடவுட் கோட்பாட்டை முற்றாகக் கழித்து விளக்குகிறது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Followers

Powered by Blogger.

- Copyright © Department of BCA